ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தப் பிரேரணையை பிரித்தானியாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக காத்திரமானதாக அமைந்திருக்கவில்லை என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடும் விசனத்தை பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்திற்கு தனது இங்கிலாந்து கிளையின் ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (2102.2021) அனுப்பி வைத்துள்ளதாக ரெலோ கட்சியின் தலைவரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட மாதிரி பிரேரணை கிடைக்கப் பெற்றது. உங்கள் முயற்சிக்கும் அங்கத்துவ நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். பிரேரணையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் பிபி7 , ஓபி 6 சரத்துக்களை பாராட்டும் அதேவேளையில் மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட 12-01-2021 திகதியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும், இங்கு இணைக்கப்பட்டுள்ள நாம் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்து கைச்சாத்திடப்பட்டு தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலும், ஆக்க பூர்வமானதும் முடிவானதுமான சரத்துக்களை உள்ளடக்குவதில் தங்கள் கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2009 இல் நடந்து முடிந்த யுத்தத்தில் எமது மக்கள் முகம் கொடுத்த சர்வதேச ரீதியாக அட்டூழிய குற்றங்கள் என்று கருதப்படும் இனப்படுகொலை உட்பட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிற்கு எமது இனத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை கோரி நாம் தொடர்ந்தும் போராடி வருகிறோம் என்பதை நன்கு அறிவீர்கள்.
பொறுப்புக்கூறலும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான சர்வதேச பொறிமுறை அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ அதற்கொப்பான பொறிமுறை அல்லது விசேட தீர்ப்பாயம்.
சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு மேற்படி நீதி வழங்கலுக்கு உதவியாக ஆதாரங்கள் திரட்டப் பட வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகப் பிரதி நிதிகள் இலங்கையில் அமர்த்தப்பட்டு இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்கள் அறிக்கையிடப்பட வேண்டும்.
எமது மக்களினுடைய அபிலாசைகளை உள்ளடக்கும் வகையிலான நமது சுய நிர்ணய உரிமையையும் வடக்கு கிழக்கு பூர்விக தாயகத்தையும் அங்கீகரிக்கும் நீண்ட கால கோரிக்கையான அரசியல் தீர்வினை சர்வதேச மத்தியஸ்தத் தோடு நிறைவேற்றுதல்.
மனித உரிமை ஆணையாளருடைய அறிக்கையில் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்த எமக்கு இந்த மாதிரி வரைவு வலிமையிழந்த நிலையிலே இருப்பதையும் அறிக்கையில் இடப்பட்ட விடயங்களில் இருந்து அதிக தூரம் விலகி செல்வதோடு கடந்த கால பிரேரணைகளான 30/1, 34/1, 40/1 ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு இருப்பதையும் அவதானிக்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் எங்களுடைய நீதிக்கான கோரிக்கைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளமையையம் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உறுப்புரிமை நாடுகளின் மீதான எம்மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாக இருப்பதையும் உணர்வதால், சமர்ப்பிக்கப் பட இருக்கின்ற பிரேரணை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் முகமாக அமைய வேண்டுமே தவிர குற்றவாளிகளை தப்பிக்க இடமளிப்பதாக இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு திருத்தி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.