“சீன மொழியில் காட்சிப்படுத்தப்படும் பெயர்ப்பலகைகளை அகற்ற முடியாது” – அரசாங்கம் திட்டவட்டம்! 

“சீன மொழியில் காட்சிப்படுத்தப்படும் பெயர்ப்பலகைகளை அகற்ற முடியாது” என அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் இலங்கையில் சீன வர்த்தக நிறுவனங்களின் தாக்கமும் அதே வேளை சீன மொழியின்தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் பலரும் சீனமொழியில் பெயர்ப்பலகைகள் பொறிப்பதை நிறுத்துமாறு கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் குறிப்பிடும் போது அரசாங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடும் போது,

தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக அரச கரும மொழிகளை மீறினால் மாத்திரமே அதற்கெதிராக நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சீன அல்லது வேறு நாடுகளின் தனிப்பட்ட பெயர் பலகைகள் காட்சிப்படுத்துகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிற்றி என்கிற துறைமுக நகரம் ஆகிய பிரதேசங்களில் சீன மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் என்பவற்றை அந்தந்த நிறுவனங்களின் தீர்மானங்களின்படி காட்சிப்படுத்த இடமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறுநாட்டு மொழிகளை இந்த நாட்டிற்குள் பயன்படுத்துவதாயின், இலங்கை அரசியலமைப்பிற்கு அது முரணான செயற்பாடாக அமையும் என்பது அரசியலமைப்பின் 4ஆவது பிரிவில் காணப்படுகின்றது.

இருந்த போதிலும் இந்த சட்டமானது, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ள முடியாது என்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைவான ஏதாவதொரு அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்துவதாயின் அது சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழி கூட்டு சேர்க்கப்பட்ட மொழியாக இணைத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிவித்துள்ள அந்த திணைக்களம், அந்த சட்டமானது அரச மற்றும் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கொள்ளுபிட்டி,கொழும்பு 07,பம்பலப்பிட்டி,வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் சீன அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறும் இடங்களிலும் சீன உணவகங்களிலும் சீன மொழி பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் இதரபகுதிகளில் சீன நிறுவனங்களின் ஒப்பந்தம் நடைபெறும் இடங்களிலும் சீன பெயர்ப்பலகைகள் பெருமளவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *