“கண்டி எசல பெரஹெராவில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்தது” என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (24.02.2021) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்தவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2019 ஏப்ரல் 4ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும் பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலை தடுக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், ஏப்ரல் 20ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தும் உறுதிமொழியை எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாவனெல்லயில் புத்தர் சிலைகளை இடித்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களான ஷாஹீத் மற்றும் சாதிக் ஆகியோர், க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றவிருந்த 30 மாணவர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.