பிரித்தானிய அரசிற்கும் ஐ.நா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை பிரித்தானியாவின் இலண்டனில் ஆரம்பித்துள்ளார் அம்பிகை செல்வகுமார் எனும் பெண்.
தான் சாகும்வரையில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த அம்பிகை செல்வக்குமார், தனது உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழ் மக்களிடம் அறிவித்திருந்தார்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருமதி அம்பிகை செல்வகுமார் தற்போது பிரித்தானியாவில் லண்டனில் வசித்து வருகின்றேன். ஈழத்தமிழர்களுக்கு விடுதலை , நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது குடும்பம் நீண்டகாலமாகவே சனநாயக களத்திலே எம்மால் முடிந்த பணிகளை நெஞ்சுக்கு நீதியாக குரல் கொடுத்து வந்திருக்கிறது.
அந்தவகையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கி சிறீலங்காவின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை சிறீலங்கா பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் நான் வாழும் பிரித்தானியா நாட்டின் தலைமையில் சிறீலங்கா குறித்து இணைத்தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள்இ மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
எனவே எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனிதநேயத்தோடு நான் சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை நாளை 27 மாசி மாதம் 2021 ஆண்டு மதியம் 12 மணிக்கு தொடங்கவுள்ளேன்.
எனது இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் பயணத்திற்கு தாயகத்திலும்இ தமிழகத்திலும்இ புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழும் நான் உயிருக்கு நிகராக நேசிக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை ஏற்று நீங்கள் அனைவரும் அனைத்துலக சமுகத்தை நோக்கி தீவிரமாக குரல் கொடுத்து இந்தப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நிச்சயம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் அனைவரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம் என்ற வேண்டுகையை உரிமையோடு உங்கள் குடும்பத்தில் ஒரு மகளாகஇ சகோதரியாக அனைவரிடத்திலும் சிரம் தாழ்த்தி வேண்டிக்கொண்டு எனது பயணத்தை தொடங்குகின்றேன். நான் பெரிது நீ பெரிது என்றில்லாது நாடு பெரிது எம் இனவிடுதலை பெரிது என்பதை மனதில் நிறுத்தி நம் நாட்டிற்கானஇ மக்களுக்கான விடுதலை நோக்கி எம் மனச்சாட்சிக்கும் பொதுநீதிக்கும் கட்டுப்பட்டு சனநாயக வழியில் தொடர்ந்து பயணிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.