மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு சார்பாக செயற்பட்டமைக்காக 06 உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 6 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பட்ட மணிவண்ணன் சார்பு அணி ரீதியான பிளவை அடுத்து மணிவண்ணனுடன் இணைந்து கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாகச் செயற்படும் உள்ளூராட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்குவதன் மூலம் உறுப்புரிமையை இழக்க வைக்கும் முயற்சியில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு மாநகர சபையில்  உறுப்பினர்களாகத் தேர்வான மணிவண்ணன் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டதன் உத்தரவுக்கு உறுப்பினர்கள் யாழ். மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்  இடைக்காலத் தடை உத்தரவைப் பெற கட்சியானது அந்த இடைக்கால தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளது.

இதேநேரம், யாழ். மாநகர சபையில் மணிவண்ணன் சார்பாகச் செயற்படும் எஞ்சிய 6 காங்கிரஸ் உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து விலக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்தில் கடிதம் அனுப்பியதன் பெயரில் அந்த அறிவித்தலை தெரிவத்தாட்சி அலுவலர் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் இந்த 6 உறுப்பினர்களும் தம்மை நீக்கிய செயலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *