காணாமல்போன மற்றும் உயிரிழந்தவர்களின் பிரச்சினையை வைத்து வடக்கு கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலை மேற்கொள்வதாக இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணாமல்போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை வழங்குவதற்கு முயற்சிக்கின்ற போதிலும், தமிழ் தலைவர்கள் அதனை விரும்புவதில்லை என அந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
இறந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர் ஒன்றியம் இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சுமார் 150 பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் விபரங்கள் அடங்கிய மகஜர் ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகலர் அலுவலகம் ஆகியவற்றிடம் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சங்கத்தின் இணைப்பாளர் ராஜன் மயில்வாகனம் தமிழ் அரசியல்வாதிகள் காணாமல்போன மற்றும் உயிரிழந்தவர்களின் பிரச்சினையை வைத்து சுயநல அரசியலை முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டினார்.