கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முசலிப் பிரதேசத்தில் அடக்கம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என முசலி பிரதேச சபை தவிசாளர் A.G.H. சுபிகான் தெரிவித்தார்.
அரசாங்கம் கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில், எங்கு அடக்கம் செய்வது என்ற முடிவு எடுப்பதில் அரசுக்குள் இழுபறி நிலவுகிறது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
அண்மையில் கொழும்பில் இருந்து வந்த நிபுணர் குழு முசலிப் பிரதேசத்தில் ஒரு இடத்தினை உறுதிப்படுத்தியது. அந்த இடம் அடக்கம் செய்ய மிகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
இது தொடர்பில் முசலி பிரதேச சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை உப தவிசாளர் எம். ரயீசுத்தின் வழிமொழிய அதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் இறந்த முஸ்லீம்களின் உடல்களை வடக்கிலுள்ள இரணைதீவீல் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையிலே வடக்கிலுள்ள பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது