“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு காண முடியாது” என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு காண முடியாது” – வாசு
கொழும்பில் இன்று(04.03.2021) செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையை சமரப்பித்துள்ளது.
அறிக்கை குறித்து பல விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளும் தரப்பு உறுப்பினர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். அறிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு தீர்வை முன்வைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுப்பிடிக்காமல் தீர்வு காண முடியாது, ஆகவே இவ்விடயம் குறித்து கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறைபாடுகள் குறித்து ஆராய விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவதும் அதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மாற்று கருத்தை தெரிவிப்பதும் காண கூடியதாக உள்ளது.
வாதப்பிரதிவாதங்கள் கூட்டணிக்குள் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும். இவ்விடயம் குறித்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கை அனைத்து மக்களும் குறிப்பாக குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.
அறிக்கையை கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது. அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணை அறிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.