“யுத்தத்தில் பல ஆயிரம் தமிழ் மக்கள் உயிரிழந்தமை உள்ளிட்ட அத்தனை அழிவுகளுக்கும் சம்பந்தன் பொறுப்பு கூறவேண்டும்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
“எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை, விடுதலைபுலிகள் அழியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டார்.
அவர் நினைத்திருந்தால் விடுதலைப்புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுப்படுத்தியிருக்க முடியும், அதற்கான சூழ்நிலையும் அப்போது காணப்பட்டது. ஆனால், சம்பந்தன் அதனை செய்யவில்லை.
இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின், சம்பந்தனிடமே முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கத்துடனும், நடுநிலை நாடுகளுடனும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
அந்த காலக்கட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சர்வக்கட்சி கூட்டங்களிலும் பங்கேற்காது, கூட்டமைப்பு செயற்பட்டமை பல பொதுமக்களின் பட்டினிச் சாவுக்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு பல விடயங்களை செய்யத் தவறிய தமிழ் தேசியக் கூட்டமை தற்போது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அது சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் என தெரிவித்துள்ளமையானது நகைப்புக்குறிய விடயமாகும்” எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.