“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது” என கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (07.03.2021) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே இவ்வாறான தமிழ்தேசிய கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சியையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன் வர வேண்டாம்.
எனவே அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும் அத்தோடு நாமும் நாடாளுமன்றத்தில் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.