ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரின் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 23, 24 ஆம் திகதிகளில் ஜெனிவா அமர்வையொட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆற்றிய உரைக்குப் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்களை சம்பந்தன் உட்பட கூட்டமைப்புத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த விடயத்தையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட சில அம்சங்கள் வருமாறு:-
1.ஏற்கனவே இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30/01, 34/01, 40/01 தீர்மானங்களில் இருந்து வெளியேறுவதான இலங்கையின் அறிவிப்பு அர்த்தமற்றது. அத்தகைய பொறுப்பிலிருந்து இலங்கை வெளியேற முடியாது.
2.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான இப்போதைய அறிக்கையை நிராகரிக்கின்றார் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் கூறுவது அர்த்தமற்றது. இந்த அறிக்கை பெரும்பாலான அங்கத்துவ நாடுகளால் வரவேற்கப்பட்டுள்ளது.
3.உலக நாடுகளில் மனித உரிமை நிலைவரத்தை ஆராய்ந்து வெளிப்படுத்துவது மனித உரிமைகள் ஆணையாளரின் சட்டபூர்வமான செயற்கடமை. அந்தச் சட்டபூர்வச் செயற்பாடு நாட்டின் இறைமையையோ, ஆள்புல ஒருமைப்பாட்டையோ மீறும் நடவடிக்கை அல்ல.
4.2015 மார்ச்சில் இலங்கை தொடர்பாக நிறைவேறப்பட்ட 30/01 இலக்கத் தீர்மானத்தை இலங்கையும் சேர்த்து ஆதரித்து அனுசரணை வழங்கியமையை, 2019 இன் ஈஸ்டர் ஞாயிறுக் குண்டுத் தாக்குதலுடன் இலங்கை அரசு இப்போது தொடர்புபடுத்தி, நம்ப முடியாத இட்டுக்கட்டும் கதைகளை அவிழ்த்து விடுகின்றது.
5.எனினும், போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விளக்கம் ஏதும் கூறுகின்றார் இல்லை.
6.இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட இலங்கை எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவேயில்லை.
7.புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக 2016இல் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக எட்டப்பட்ட தீர்மானத்தை முன்னெடுக்க இலங்கை ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை. அதற்கு எதிரான போக்கே இப்போது முன்னெடுக்கப்படுகின்றது.
8.1971 மற்றும் 1988/ 89 இல் தென்னிலங்கையில் பல பத்தாயிரம் இளைஞர்கள் சட்ட விரோதமான முறையில் கொன்றொழிக்கப்பட்டனர். அப்போதும் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டன. அவை எவற்றுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேயில்லை.
என்று கூட்டமைப்பு தனது அறிக்கையில் கோரியுள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கை வலிமையானதாக அமைந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள த.தே.ம.முன்னணி இனியெப்போதும் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் கூறியுள்ளமையும் நோக்கத்தக்கது.