“இலங்கை தற்போது மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்குண்டு போக  ராஜபக்சக்களின் மோசமான செயல்களே பிரதான காரணமாகும்” – ரணில் விக்கிரமசிங்க 

“இலங்கை தற்போது மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்குண்டு போக  ராஜபக்சக்களின் மோசமான செயல்களே பிரதான காரணமாகும்” என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எமது நல்லாட்சியில் சர்வதேசத்தின் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுத்திருந்தோம். ஐ.நாவைப் பகைக்காமல் நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் சர்வதேசத்துடன் இணைந்து நாம் பயணித்தோம். ஆனால், மீளவும் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச தரப்பினர், இலங்கையை மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளனர்.

தமிழ், முஸ்லிம் மக்களைப் பழிவாங்கும் வகையில் இந்த ஆட்சியில் இடம்பெறும் மோசமான செயல்களாலே இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணையை ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் முன்வைத்துள்ளன.

அன்று எமது நல்லாட்சியை வாய் கிழியக் கத்தி விமர்சித்த இனவாதிகள், இன்று வாயடைத்து – பேச்சடங்கி – பேச முடியாத நிலையில் உள்ளனர். நாட்டின் இந்த அவல நிலைக்கு அவர்களும் காரணமாக உள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் பான் கி – மூனுடனான கூட்டு உடன்படிக்கையில் அன்று கையெழுத்திட்ட முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, இன்று ஐ.நாவுக்கு சவால் விடுவது வேடிக்கையானது தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *