“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு, கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(10.03.2021) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அவர்தான் பிரதானி எனக் காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கூட தற்கொலை தாக்குதல் போராளி ஒருவரை உருவாக்குவதற்குப் பல வருடங்கள் எடுத்தன. எனவே, சஹ்ரான் திடீரென உருவான நபர் கிடையாது. 2005 காலப்பகுதியில் இருந்து அவர் கருத்தியலை விதைத்து வந்துள்ளார். 2014 வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தகவல் வெளியிடப்படவேண்டும்.

ஜனாதிபதி ஆணைக்குழு என்பது நாடகம். எனவே, நாடகம் முடியும்போது நிச்சயம் உண்மை தெரியவரும்.

எமது ஆட்சியின்கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்படும். கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *