பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுவிட்சர்லாந்திலும் குறித்த ஆடை அணிய தடை விதிக்க மக்களுடைய ஆதரவு கிடைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அம்மாதிரியான ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்து தடை விதிக்கும் சட்டத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஐரோப்பிய நாடுகளில் முகத்தை மறைக்கும் புர்கா போன்ற ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய ஆடைகளுக்குத் தடை வேண்டி விவாதங்கள் பரவலாக நடத்தப்பட்டு வந்தன. இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராகப் பொதுமக்கள் வாக்களிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசே வலியுறுத்தியது.
இந்த நிலையில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு எதிராக 14,26,992 பேர் வாக்களித்தனர். 13,59,621 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்தில் விரைவில் தடை அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்கா போன்ற முகத்தை மறைக்கும் ஆடை அணிவது அடிப்படைவாதம் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.