“சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் தேசிய வளங்களை கைப்பற்ற பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்துள்ளன” என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் திஸ்ஸ விதாரண மேலும் கூறியுள்ளதாவது,
“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை இடம்பெறவுள்ள கூட்டத்தொடர் தீர்மானமிக்கதாக அமையும். ஆகவே ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் நுணுக்கமான முறையில் கையாள வேண்டும். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியமாகும்.
இதேவேளை ஜெனிவா விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பில் சற்று தலம்பல் நிலை காணப்படுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாட்டை இந்தியா இலங்கைக்கு எதிராக பயன்படுத்த கூடாது.
இந்தியா தற்போது அமெரிக்காவின் கொள்கையினை ஈர்த்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. ஒருபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடு மறுபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்கையினை ஜெனிவா விவகாரத்தில் நெருக்கடிக்குள்ளாக்க கூடாது. சீனா இலங்கைக்கு எதிராக தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்ற உறுதிப்பாட்டை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை.
பலம் கொண்ட இந்த மூன்று நாடுகளும் இலங்கையின் தேசிய வளங்களை கைப்பற்ற ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்துள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.