“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது ” – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது ” என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியாவின் காரணத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புப் சபையில் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முன்மொழிவு வந்தால், உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தடுப்பதிகாரத்தைக் கொண்டு தடுக்க வாய்ப்புள்ளது என பிரித்தானியா அரசாங்கத்தின்  தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, உரோம் உடன்படிக்கையில் இலங்கை ஒப்பமிட்டவில்லை என்பதால், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் மேலுரிமைக்கு இலங்கை உட்படாது என்றும், இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு போதுமான ஆதரவு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இல்லை என்பதும் பிரித்தானியாவின் நிலைப்பாடாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்துக் கேள்வியெழுப்பியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், “இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் இரையானவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது எனவும் தெரிவித்துள்ளது.

உரோம் உடன்படிக்கையில் இலங்கை ஒப்பமிட்டு ஒரு தரப்பாக இருந்திருந்தால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமே நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுப்பரிடம் சான்றியத்தை அளித்திருக்கும். மனித உரிமைப் பேரவையோ பிரித்தானிய அரசாங்கமோ இதில் தலையிட வேண்டி ஏற்பட்டிருக்காது.

எனவே, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் போதிய ஆதரவு இல்லையென்று பிரித்தானிய அரசாங்கம் கூறியிருப்பதானது, முற்றுமுழுதாக ஏற்கக்கூடியது அல்லவெனவும், ஒரு அவசரப் போக்கு.

அத்துடன், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குள் எதிர்ப்பேதும் இருப்பதாக பிரித்தானியாவுக்குத் தகவல் கிடைத்திருந்தால், அதன் விவரங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்புப் சபையில் தடுப்பதிகாரம் படைத்த உறுப்பு நாடு என்ற முறையில் பிரித்தானியாவுக்குள்ள நம்பகத்தன்மையைக் காக்க இது பெரிதும் பயன்படும்.

மேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் வேண்டுகோள் என்பது, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தடுப்பதிகாரம் கொண்டு தடுக்கப்பட்டாலும்கூட, அது, இலங்கையின் வடக்குக் – கிழக்குப் பகுதியில் மனிதவுரிமை உயராணையாளர் அலுவலகம் ஒன்றைத் திறப்பது போன்ற பிற தீர்மானப் பொருட்பாடுகள் மீதான உயராணையாளர் அலுவலகத்தின் மேலுரிமையை இல்லாமற்செய்து விடாது.

இதேவேளை, தற்போதைய வரைவுத் தீர்மானத்தில் உள்ளகூறுகள், இலங்கை அரசாங்கம் உள்ளகச் செயல்வழியைக் கடைப்பிடிக்கும் படி கோருகிறது. இதைவிட, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி, ஒருவேளை தடுப்பதிகாரத்தினால் தடுக்கப்பட்டாலும் பரவாயில்லை.

அத்துடன், கடுங்குற்றங்களைப் புலனாய்வு செய்து வழக்குத் தொடரும் பொறுப்பை, அதே இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைப்பது என்பது, குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒருபோதும் நீதிபதியாக முடியாது என்ற அடிப்படையான நீதிக் கொள்கையோடு அப்பட்டமாக முரண்படுவதாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *