“தமிழ்த்தேசத்தில் இறந்துபோன சம உரிமைகளை பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திர கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு இன்று (13.03.2021) விஜயம் மேற்கொண்ட அவர் விசேட பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“நான் வடமாகாண ஆளுனராக பதவி வகித்த 10 மாதங்களில் பத்தாயிரம் குடும்பங்களிற்கு அரச காணிகளை வழங்கியிருந்தேன். இராணுவத்திடம் இருந்த ஆயிரம் ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளித்திருந்தேன்.
இதேவேளை கொழும்பில் இருக்கும் காணி ஆணையாளரிடமிருந்து கிடைக்கவேண்டிய ஒழுங்கான ஒத்துழைப்புக்கள் வலுவாக கிடைக்கவேண்டும் என்பதற்காகவே வடமாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதே தவிர வடமாகாணத்தை சேர்ந்த எந்த அதிகாரங்களும் பறிக்கப்படவில்லை பறிக்கப்படக்கூடாது, பறிக்கப்படமுடியாது.
தற்போது வன்னிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழ் தேசத்திற்காக நான் செய்யவேண்டிய பணியை திரும்பவும் என்னிடம் இறைவன் வழங்கியதாகவே நினைக்கிறேன். வடமாகாணத்திலேயே குறிப்பாக விழுத்தப்பட்ட சமூகங்கள் வாழ்கின்ற வன்னியை முழுமையாக மாற்றியமைக்க என்னுடைய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டம் காலம் காலமாக பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. அந்த நிலை மாறவேண்டும்.
நாட்டின் ஆழமான ஒரு ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.
விசேடமாக தமிழ்தேசத்தில் இழந்து போன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும். அதனை நான் ஆளுனராக இருந்து ஏற்கனவே செய்திருக்கின்றேன். எமது மக்களை ஜனநாயகத்தின் பாதையிலே நடாத்திச்செல்வதற்கான வழிமுறைகளை கூட்டுமுயற்சியாக செய்யவேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை” என்றார்.