ஐ.நாவில் திரையிடப்பட்ட “கண்ணீர் நிறைந்த பாதை” ஆவணப்படம் !

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளடங்கிய ஆவணப்படமொன்று ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும்வகையில் “கண்ணீர் நிறைந்த பாதை” (The Tearful Trail) என்ற 40 நிமிட ஆவணப்படமாக இது  உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவைத் தளமாக் கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமை சபையின் (Universal Human Rights Council) தலைவர் முயீஸ் வஹாப்தீன் இந்த ஆவணப்படத்தினை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான நசீமா பக்லி மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிட இணைப்பாளர் டேவிட் வலி ஆகியோரிடம் நேரடியாகக் கையளித்ததுடன் மனித உரிமையுடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கூறும் ஆவணப்பட்ம் சமர்பிக்கப்பட்டது வரலாற்றின் இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன், இலங்கைச் சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களை உள்ளடக்கிய “Declared and Undeclared Wars Against Minorities” என்ற சுமார் 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும் இவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக கோஷங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதே நேரம் பல நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளுக்கு விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மேலும் இதில் 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் வாக்குகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *