இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான நேற்றைய (13.03.2021) சந்திப்பில் காணி அபகரிப்பு தொல்பொருள் மற்றும் மாகவலி திட்டம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நேற்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் திருகோணமலையில் சந்தித்த வேளை, வடகிழக்கு மற்றும் எமது மாவட்டம் சம்பந்தமான பல விடயங்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அதில் முக்கியமாக எமது காணி அபகரிப்பு தொல்பொருள் மற்றும் மகாவலி திட்டம் சம்பந்தமான பிரச்னைகள் சம்பந்தமாகவும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப துறையை வட-கிழக்கில் நிறுவுவதற்கான பரிந்துரை செய்திருந்தேன்.
இதன் மூலம் பல இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பதனையும் சுட்டிக் காட்டியிருந்தேன். அத்துடன் துறைமுகங்களை மென்மேலும் அபிவிருத்தி செய்து மென்மேலும் அவசியமான இடங்களில் மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மற்றும் காங்கேசன்துறை போன்ற இடங்களில் உருவாக்குவதன் மூலம் இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள உள்ளூர் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்கலாம் என்பதனையும் பற்றி எடுத்துக்கூறி இருந்தேன்.
அத்துடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அழுத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் உள்ளூர் பயண சேவைகளை இதன் மூலம் உருவாக்குவதோடு சென்னைக்குமான பயண கட்டமைப்புக்களை இங்கிருந்து ஏற்படுத்துவதன் மூலம் உல்லாச பிரயாண துறையினை மென்மேலும் அபிவிருத்தி செய்வதோடு இதன் மூலம் பல தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கலாம் என்பதனையும் எடுத்துரைத்திருந்தேன். அத்துடன் சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பு எமது மக்களுக்கான எதிர்கால மாற்றத்தின் முதல் படி.” எனவும் இந்திய தூதுவரிடம் சாணக்கியன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது .