“ஆயுதத்தையும் நம்மையும் பிரிக்கமுடியாது” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,
“ஆயுதத்தையும் நம்மையும் பிரிக்கமுடியாது. ஆயுதக்குழு என்பது விடுதலைப்புலிகளும் ஆயுதக் குழுதான், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஆயுதக்குழுதான். ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும்.
தற்போது அந்தத் தேவை மாறி அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு சமூகம் மாறுவதற்குரிய பிரதான பங்கு ஒரு அரசியல் இயக்கத்தினுடையதாகும். அந்த இயக்கம் தான் நாங்களாவோம். எங்களுக்கும் திட்டங்கள் இருக்கின்றன.
நாங்கள் பல வயல்களையும் வைத்துக்கொண்டு உன்னிசைக் குளத்தினையும் வைத்துக்கொண்டு தண்ணீர் இல்லை என்று சொல்வது பிழையான விடயமாகும். காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா இருந்தார், அவர் அங்கு தண்ணீரை கொண்டு சென்றார். உங்களுக்கென்று யாருமிருக்கவில்லை.
மகிழவெட்டுவான் ஒரு பாரம்பரிய கிராமமாகும். ஐந்து வருடம் நல்லாட்சியில் இருந்தவர்கள் அங்கு இரண்டு வீதிகளையும் புனரமைக்கவில்லை. அங்கு பாடசாலையின் நிலையும் மோசமாகவுள்ளது. யோகேஸ்வரனின் சொந்த ஊரிலே இம்முறை முதலாம் தரத்திற்கு இரண்டு பிள்ளைகள் மட்டுமே. சமூகத்தில் வந்து வாக்கு கேட்டு வென்ற தலைவர்கள் தங்களுடைய கிராமத்தையே கட்டியெழுப்பவில்லை என்றால் அவர்களின் அரசியல் தோல்வியடைந்த ஒன்றாகும்” என அவர் குறிப்பிட்டள்ளார்.