“தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்துகிறார்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடும் போது ,
“எந்த வேலைத்திட்டத்தினையும் செய்யாமல், வீதிகளை அமைத்து குளங்களை அமைத்து நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து அவன் வருகின்றான், இவன் வருகின்றான், விகாரைகளை அமைக்கின்றான் என்று கூறினால் என்ன மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள்.
நாம் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே சொல்கின்றோம். நாங்கள் முதலில் மாற வேண்டும். வேறு எவரதும் கால்களைப் பிடிக்கத் தேவையில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மக்களை முன்னேற்றுகின்ற பலப்படுத்துகின்ற கட்சியாகும். எங்கள் வேலைத்திட்டம் மிகத் தெளிவானது.
அடுத்தமுறை எமது மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருவாரானால் தொழில் வாய்ப்பை பெருக்குவதற்கு, தொழிற்பேட்டைகளை அமைக்கலாமா? இங்கேயே 20ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கலாமா? என்பது குறித்து கலந்துரையாடுவோம்.
நாங்கள் முதலில் வவுனதீவு, கரடியனாறு போன்ற பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வோம். இதற்காக 400மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
புதிய அரசாங்கத்தின் கொள்கையினால் மட்டக்களப்பு மாவட்டம் நன்மையடைகின்றது. நாங்கள் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் பிறரை எதிர்பார்த்திருந்து பின்தங்கிவிட்டோம். இப்போது நாம் தான் அனைத்தையும் செய்யப்போகின்றோம். நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளை கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம். எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் இங்கு வாக்குகளை பெறுவதாகும். சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்தி சுமந்திரன் வாக்குகளை பெறவேண்டும். தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக அவரை பயன்படுத்துவார்.கட்சிக்குள் பலத்தினை கூட்டுவதற்கே பார்க்கின்றனர்.
இன்று மேய்ச்சல் தரைப்பிரச்சினை பற்றி கதைக்கின்றனர். அதுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கினை தாக்கல் செய்யுங்கள், சென்று போராடுங்கள். அதுதான் உங்கள் வேலை. நாங்கள் மக்களின் தேவையினை நிறைவேற்றுவோம். ஆனால் அவர்கள் அதனை செய்வதில்லை எங்களை தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.