தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர்கள் குறித்த விடயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையை, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள ஏழு தமிழர்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க வழிகாணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது அல்லது குடியிருப்பு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற விடயங்கள் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.