அமேசன் இணையத்தளத்தில் இலங்கையின் தேசிய கொடி கால்துடைப்பானாக விற்பனைக்கு வந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்த நிலையில் அது இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்த விற்பனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நல்லவேளை.., அமேசன் இணைய அங்காடியால் விற்கப்பட்ட, “ஸ்ரீலங்கா சிங்க வாசல் விரிப்பு” , ஒரு சீன தயாரிப்பு. ஆகவே “மூடிக்கொண்டு” இருக்கிறார்கள். தற்செயலாக இதொரு “இந்திய” நிறுவனமாக இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என கற்பனை செய்தால்.?
ஆமதுரு தேசிய வீரர்கள் இந்திய தூதகத்தை நோக்கி ஊர்வலம்.
நாடாளுமன்றில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, காட்டுக்கூச்சல்
இந்திய மற்றும் தமிழ் தந்தை-தாய்மார்களை பற்றி இராவண பல, சிங்கலே, காவியுடை பயங்கரவாதி கும்பல்கள் நாடெங்கும் சந்திக்கு சந்தி ஆர்ப்பாட்டம்.
தலையில் சுகமில்லாத ஏதாவது ஒரு ஜந்து சி.ஐ.டிக்கு சென்று இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக புகார்.
இந்தியாவை விரும்பும் போது தாங்கள் “வடஇந்திய பரம்பரை” , வெறுக்கும் போது அது “தமிழ் எதிர்ப்பு” என்ற இவர்களது வழமைக்கு இணங்க, தமிழ் எதிர்ப்பு கோஷம்.
வேறு என்ன? என பதிவிட்டுள்ளார்.