இலங்கை யின் 61வது சுதந்திர தினம் இன்றாகும். இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுகின்றது.
இதனை முன்னிட்டு கொழும்பு நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மாத காலம் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
சுதந்திர தினத்தை யொட்டிய நிகழ்வுகளுக்கும், தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்குமாக பத்தாயிரம் பொலிஸாரும் முப்படையினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென புலனாய்வுத் துறையினரும், சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு காலி முகத் திடலில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சுதந்திர தின பிரதான நிகழ்வுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, மேல் மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், விசேட அதிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்புப் படைசார்பில், பிரதம பாதுகாப்பு அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.