“சிங்கள ஊடகத்தில் வெளியான செய்தியின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்” – எம்.ஏ.சுமந்திரன்

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

அந்தச் செவ்வியில் பஸில் ராஜபக்‌ச தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தான் வழங்கிய பதில்களை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌சவுக்குத் தாம் ஆதரவளிப்பதாகக்  கூறியதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக சுமந்திரன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

43 நிமிடங்களைக் கொண்ட அந்தச் செவ்வியில் பஸில் ராஜபக்ச தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை வாசித்து செய்தியின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இணையத்தளத்துக்கு சிங்கள மொழியில் அவர் வழங்கிய செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களின் தமிழ்மொழி பெயர்ப்பை சுமந்திரன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

SLVLOG என்ற இணையத்துக்கு அண்மையில் சிங்கள மொழியில் கொடுத்த பேட்டியில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவுக்கு நாம் ஆதரவளிப்போம் என்று நான் கூறியதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப் பேட்டியின் முழுமையான காணொளியும் இத்துடன் இணைக்கப்படுகின்றது. இதில் 41.15ஆம் நிமிடத்திலிருந்து 43ஆம் நிமிடம் வரை இவ்விடயம் பேசப்படுகின்றது.

இவற்றை வாசித்து/ செவிமடுத்து இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

நன்றி,
எம்.ஏ.சுமந்திரன்.

கேள்வி:- 2024/2025 இல் எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய இரு வேட்பாளர்களில் உங்கள் விருப்பு யாராக இருக்கும்?
பதில்:- தற்போது அதனைக்கூற இயலாது

கேள்வி:- நிகழ்கால நிலமையின் அடிப்படையில்?
பதில்:- இந்த காலகட்டத்தில் எமது தெரிவு சஜித்தாகவே இருக்கும். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் இரு தரப்பினரோடும் பேச்சு நடத்தினோம். அதன்போது சஜித்தே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இணங்கியதோடு அவரின் தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேள்வி:- சஜித் பிரேமதாஸவுக்கு நிகராக பஸிலும் முற்போக்கு சிந்தனை உடையவராகக் காணப்படுகின்றார். அவ்வாறான சூழ்நிலையில் உங்கள் நிலைப்பாடு?

பதில்:- எனக்கு அக்கருத்தோடு உடன்பாடில்லை. அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே ‘திவிநெகும’ எனும் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக பிரதேச சபையின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருந்தார். எனவே, அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவருக்குச் சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் காணவில்லை.

கேள்வி:- உங்களுக்கு சஜித் பிரேமதாஸ அதிகாரங்களைப் பகிர்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?
பதில்:- அவர் அதிகாரப் பகிர்வுக்கு இணங்கியுள்ளார். இருப்பினும் இது நிகழ்கால சூழ்நிலையே, 2024/2025 இன் போது பஸிலும் அதிகாரப் பகிர்வுக்கு இணங்குவாரானால், அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் இதனைப் பிரச்சாரப்படுத்தினால்….

கேள்வி:- சஜித் மூலமாக அல்லாது பஸிலின் மூலமாகவே இதனை அடைவது இலகுவல்லவா?
பதில்:- அவர் இணங்குவாராயின் அது இலகுவாக இருக்கும். இதனை நான் கோட்டாபய ராஜபக்சவிடமும் தெரிவித்திருந்தேன். “நீங்கள் தீர்வுக்காக முயற்சி செய்தால் தீர்வை அடைய முடியும். உங்களை சிங்கள மக்களுக்கு எதிராகத் தொழிற்படுவதாக யாரும் குற்றப்படுத்தமாட்டார்கள்” என்று கோட்டாபய ராஜபக்சவிடம் நான் கூறியிருந்தேன். அவரும் அதனை ஒத்துக்கொண்டார். ஆம் என்னால் முடியும் என்று அவர் ஏற்றுக்கொண்டாலும் அதனை இதுவரை செய்யவில்லை.

கேள்வி:- ஏன் அவர் அதனைச் செய்யவில்லை?
பதில்:- அவருக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதனடிப்படையில் அவர் இதனைச் செய்யவில்லை.

நன்றி சுமந்திரனே. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரயாணத்தின் இடையில் இந்தச் செவ்விக்காக நேரத்தைத் தந்தமைக்கு மீண்டும் தங்களுக்கு நன்றி – என்றுள்ளது.

என குறித்த முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *