மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்பின் அழைப்பின் பேரில் மன்னாரிலும் செட்டிக்குளத்திலும் அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களைச் சந்திக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, சுரேஷ் பிரேமச்சந்திரன், சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோர் நேற்றுக்காலையில் மதவாச்சி சோதனைச் சாவடியில் சுமார் மூன்றரை மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லையெனத் தெரிவித்து மேற்கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும், சுரேஷ் பிரேமச்சந்திரன், சந்திரநேரு ஆகியோரும் காலை 9.30 மணியளவில் மதவாச்சி இராணுவச் சோதனைச் சாவடியை சென்றடைந்துள்ளனர். அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தங்களது மன்னார் பயணம் தொடர்பாக தெளிவுபடுத்திய போதிலும் மேலிட உத்தரவை பெற்றுக் கொள்ளும் வரை தாமதிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் மூன்றரை மணித்தியாலங்களாக நீண்ட நேரம் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லாமல் மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாதென அங்குவந்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜயலத் ஜயவர்த்தன உடனடியாகவே அநுராதபுர மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும், அமைச்சர்கள், பாதுகாப்புப் பிரிவு, பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் தொடர்பு கொண்ட போதிலும் அவர்களிடமிருந்து சாதகமான பதில் எதுவுமே கிடைக்கப் பெறவில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தால் மாத்திரமே தங்களால் அனுமதிக்க முடியுமெனத் தெரிவித்துள்ளனர்.