“எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்” என இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடாமல் உள்ள அஸ்வினிடம், எப்போது மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் அணிக்குள் திரும்புவீர்கள் என வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடன் எப்படிப் போட்டியிட வேண்டும், முழு நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்துள்ளேன்.
ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு நான் எப்போது திரும்புவேன் என என்னிடம் கேட்பது நகைப்புக்குரியதாக உள்ளது. என் வாழ்வில் இப்போது நிம்மதியாக, மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இப்போதுள்ள நிலையில் என்னால் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன்.
மக்களின் கேள்விகளையும் அவர்களுடைய கருத்துகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை. எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்’ என கூறினார்.
34 வயதான அஸ்வின் இதுவரை 78 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 36 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.