இலங்கைப் போரில் அந்நாட்டு இராணுவத்துக்கு இந்தியா உதவுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நேற்று தி.மு.க. செயற்குழுவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு;
கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா?
ப: அதற்காகத் தான் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றோம். மாநில அரசுக்கு நேரடியாக தலையிட்டு போரை நிறுத்த அதிகாரமோ வலிமையோ இல்லை.
கே: தி.மு.க. அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாகக் கூறியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம்?
ப: தேவையற்ற கிளர்ச்சிகளை நடத்துகின்றனர். முதலில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு இப்போது பிரதான கட்சியான தி.மு.க.விற்கு எந்த அழைப்பும் இல்லை. இது ஒன்றே போதாதா?
கே: நாளை (04) பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ?
ப: இது குறித்து நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.
கே : முதல்வர் என்ற முறையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
ப: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கே: ராஜபக்ஷ தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே?
ப: எதுவும் கூற விரும்பவில்லை.
கே: பந்த் தேவையற்றது என்று மார்க்ஸிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளாரே?
ப: அவரது கருத்தை வரவேற்கின்றேன்.
கே: இலங்கையில் பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்திலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்துகின்றதே?
ப: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதில் இரு வேறு கருத்துக்கே இடமிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்திட தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.
கே: அப்படியென்றால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா?
ப: மதியார் தலைவாசல் மிதிக்கமாட்டோம்.
கே: இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதி விடுதலைப்புலிகள் தான் என்றும் பிரபாகரனோடே சமரசத் தீர்வு குறித்து பேச முடியும் என்றும் கூறப்படுகிறதே?
ப: பிரபாகரனா அல்லவா என்பது அல்ல பிரச்சினை. இலங்கையில் நடைபெறும் தமிழர் படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்பதே முக்கியம்.
கே: ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கட்சிகள் கூறுகின்றனவே?
ப: ஐக்கிய நாடு தலையிட்டால் நல்லது. வரவேற்பேன்.
கே: இலங்கையில் நடக்கும் போரை இந்தியா தான் பின்னின்று நடத்துகிறது. தேவையான எல்லா உதவிகளையும் அளிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே?
ப: இத்தகைய பொய்க்குற்றச்சாட்டுக்கு பலமுறை இந்தியா பதிலளித்து விட்டது. பாதுகாப்பு அமைச்சரும் உரிய பதில் அளித்துள்ளார்.
கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை திருப்தியளிக்கிறதா?
ப: போதுமானதாக இல்லை என்பதால்தான் இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
கே: பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம் திருப்தியளிக்கிறதா?
ப: அவருக்கே முழுத்திருப்தியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு கொழும்புடன் இணைந்து தீர்வுகாண டில்லியிடம் தி.மு.க. கோரிக்கை
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசாங்கம் கொழும்புடன் இணைந்து தீர்வு காணவேண்டும் என்றும் குறித்த காலவரையறைக்குள் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வையும் சுயாட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தி.மு.க. கோரியுள்ளது.
இதேவேளை, தமிழக அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும்நிலையில், அந்த இயக்கத்துடன் தன்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்பாத கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி எதிர்வரும் 7ஆம் திகதி சென்னையிலும் 8,9 ஆம் திகதிகளில் மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பேரணிகள், பிரசாரப் பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக முடிவுசெய்திருக்கிறது.
அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்வதுடன், குறிப்பிட்டகால வரையறைக்குள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.இதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் “”தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்யும் சூழ்நிலை உருவாகும்’ என எச்சரிக்கப்பட்டது.
அதன் பிறகு சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூடியபோது இறுதி வேண்டுகோள் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமார் சென்னையில் தீக்குளித்து இறந்தார். இலங்கைப் போர் பற்றி போராட்டங்கள் நடத்தி வந்த கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இப்போது ஓரணியில் திரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளன.
எனவே இப் பிரச்சினையில் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் மத்திய அரசில் இருந்து தி.மு.க.அமைச்சர்கள் ராஜிநாமா அல்லது மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் போன்ற முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கைப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க நேற்று கூடிய தி.மு.க.செயற்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி பேரணி மற்றம் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Mr Cool
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக முதல்வர் கருணாநிதி பதவி துறக்க வேண்டிய அவசியமில்லை என்று இலங்கை அதிகள் மறுவாழ்வு அமைப்பின் பொருளாளர் சந்திரகாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தி, தங்கள் ஆதங்கத்தை உலகிற்கு தெரிவிக்க முடிகிறது.
இந்தியாவும் உலகமும் மெல்லவேனும் இலங்கைத் தமிழர் உயிர் காப்பிலும், உரிமைக் காப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே தங்கள் உடல்நலத்தைப் போலவே தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியும், நலமும், பலமும் பெற்றுத் தொடர்வது இன்றியமையாததாகும். தமிழாய்ந்த தமிழராகிய, மொழி உணர்வும், இனவுணர்வும், மாந்த நேயமும் கொண்டவராகிய தங்கள் ஆட்சி தொடர்வது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும், எங்குள்ள தமிழர்களுக்கும் இன்றியமையாததாகும்.
ஈழத்தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு எதிரான போரை நிறுத்தத் தாங்கள் பதவி துறக்க வேண்டுமென்ற கோரிக்கை அறியாமையில் இருந்து எழுவதாகும். ஈழத்தமிழர்களே அதை விரும்பவில்லை. ஈட்டி இழந்த நிலையில் கேடயத்தையும் தூக்கியெறிய வேண்டுமென்று கேட்பது போன்றதாகும் அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை எவர் மறத்தாலும் அதனை ஏற்க முடியாது.
இந்திய மத்திய அரசை எங்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக இயங்கச் செய்வதில் உங்கள் பங்கு முக்கியமானது. தமிழக அரசில் தாங்கள் தொடர்ந்தால் அதனை சிறப்பாகச் சாதிக்க முடியும் என்பதை தமிழீழ மக்களும் தமிழக மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு கண்டபின் நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும் பணியாகும். இவ்வளவு பெரிய தமிழ்நாட்டை, இன்னும் சொன்னால் இந்தியாவையே எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவில் புதிய புதிய திட்டங்கள் மூலம் வானளாவ உயர்த்தியிருக்கும் தங்களின் வழிகாட்டுதலும், உதவிகளும் எங்களுக்கு இன்றியமையாதவையாகும். அவற்றை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று நாங்கள இப்போது விண்ணப்பித்துக்கொள்கிறோம்.
அத்துடன் தங்களை நேரில் வந்து காண ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி ஒப்புதல் தர வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.