“பெண்களுடைய பிரதிநிதித்துவம் அரசியலில் குறைவாகவுள்ளமையாலே அரசியல் கொள்கைகளிலும், சட்டவாக்கங்களிலும் பெண்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது“ என வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த அரசாங்க அதிபர்களும், நானும் ஒரே மாநாட்டில் கலந்து கொண்ட போது நான் பேசியதைப் பார்த்து திகைத்து போய் நின்ற சம்பவங்களும் உண்டு. எங்கு அடக்கப்படுகின்றீர்களோ, எங்கு உங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ, எங்கு நீங்கள் தடுக்கப்படுகின்றீர்களோ அங்கு தான் நீங்கள் கிளர்ந்து எழ வேண்டும். அங்கு தான் உங்களுக்கு சாதனைகள் இருக்கும். கடமைகளை சரியாக செய்கின்ற போது பதவிகள் தானாகவே தேடி வரும்.
பெண்களுடைய பிரதிநிதித்துவம் அரசியலில் மிகக்குறைவாக காணப்படுகின்றது. இதனால் அரசியல் ரீதியாக சில கொள்கைகளிலும், சட்டவாக்கங்களிலும் பெண்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது. காணி உரிமைச் சட்டத்தில் மூன்றாட் அட்டவணையில் பெண்களுக்கு காணி உரிமை மாற்றுவது மறுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது குடும்பத்தில் மூத்த ஆண் மகனுக்கு தான் காணி உரிமை மாற்றப்படுகின்றது. இந்த சட்டம் திருத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.
திருமண அத்தாட்சிப் பத்திரமான பதிவுத் பத்திரத்தில் பெண்களின் உடைய தொழிலை பதிவதற்கான இடம் வழங்கப்படவில்லை. காலனித்துவ ஆட்சியில் பெண்கள் உத்தியோகம் பார்க்கவில்லை. அதனால் அன்று வடிவமைக்கப்பட்ட படிவங்களில் அவை காணப்படவில்லை. அப்படிவங்களே சுமார் 70 வருடங்களாக நாம் பின்பற்றி வருகின்ற நிலமை காணப்படுகின்றது.
பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் போது தான் சட்டவாக்கம் ஊடாகவும், கொள்கை வகுப்பின் ஊடாகவும் பெண்களைப் பாதுகாக்கும் ஒரு நிலமை இந்த நாட்டில் ஏற்படும். வடமாகாணத்தில் மகளிர் விவகாரம் என்பது எமது மாகாண அதிகார பரம்பலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
வடமாகாணம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் நாம் பேசியுள்ளோம். பல விடயங்களை செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். எங்களுக்கு கிடைத்த நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கி தந்து சில விசேட வேலைத்திட்டங்களை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்” என்றார்.