வன்னியிலுள்ள நோயாளர், சுகாதார துறை ஊழியர்களை புலிகள் உடன் விடுவிக்க வேண்டும்- புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் வேண்டுகோள்

red_cross.jpgவிடுவிக் கப்படாத வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவி நோயாளர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் மோதல் தவிர்ப்பு பிரதேசத்திற்குள் செல்லுவதற்கு இடமளிக்குமாறு புலிகள் இயக்கத்தினருக்கு அழுத்தம் கொடுக்கும்படி சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது.  இது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை, அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுலகஹந்த லியனகே அவசர கடிதமொன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நேற்று அனுப்பி வைத்தார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது : முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் தம்முடன் தொடர்புகொண்டு புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், உடையார்கட்டு, மற்றும் சுதந்திரபுரம் ஆகிய பிரதேச ஆஸ்பத்திரிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட வேண்டிய விதம் தொடர்பாக ஆலோசனை கேட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெறும் போது இந்த ஆஸ்பத்திரிகளின் சுற்றுப்புறங்களில் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி வேட்டுக்கள் இடம்பெறக்கூடிய அச்சுறுத்தல்கள் உள்ளன.  அதனால் இப்பிரதேசங்களை விட்டு விலகி மோதல் தவிர்ப்பு வலயத்திற்கோ, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கோ செல்லுமாறு இந்த ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், சிகிச்சைபெறும் சிவில் நோயாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

புலிகள் இயக்கத்தினர் இப்பிரதேச சாதாரண மக்களுடன் கலந்து இருக்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகளை அமைத்திருக்கிறார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் இந்த ஆஸ்பத்திரிகளின் ஊழியர்களையும், அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களையும், ஆஸ்பத்திரிகளின் வளாகங்களில் முகாமிட்டிருக்கும் சிவிலியன்களையும் பாதுகாப்பு கருதி வெளியேறுமாறு கேட்டிருக்கிறேன். புலிகள் இயக்கத்தினரின் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்கள் காரணமாக சிவிலியன்களுக்கு பாதிப்புக்களும், காயங்களும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும் தமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் செல்லுவதற்கு மக்கள் தயாராக இருப்ப தாகவும், அதற்குப் புலிகள் இயக்கத்தினர் தடையாக இருப்பதாகவும் தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி விடு விக்கப்படாத வன்னிப் பிரதேசத்தில் உள்ள சுகாதார துறை ஊழியர்களும், நோயாளர்களும், பொதுமக்களும் மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் அச்சமின்றி சுதந்திரமா கச் செல்ல இடமளிக்குமாறு புலிகள் இயக்கத்திற்கு ஐ. சி. ஆர். சி. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *