“தோட்டத் தொழிலாளர்களை ‘டம்மி’ மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது” – அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் காட்டம் !

“தோட்டத் தொழிலாளர்களை ‘டம்மி’ மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது” என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தமக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என 2015 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இறுதியில் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கும் கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டன. ஆனாலும் ஆயிரம் ரூபா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வருவதற்கு தடைவிதிக்குமாறு கோரி கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. சர்வ அதிகாரங்களும் கொண்ட பலம்பொருந்திய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கம்பனிகள் சவாலுக்குட்படுத்தியுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பது அரசின் உறுதிமொழி. அது எப்படியாவது நிறைவேற்றப்படவேண்டும். எனவே, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் தனது நிலைப்பாடு என்னவென்பதனை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதேபோல் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களை ‘டம்மி’ மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. வடிவேல் சுரேசும் கூட ஏமாற்றுகின்றார். ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் கூட நாடகம் என்பது எமக்கு தெரியும். இருந்தாலும் தொழிலாளர்களின் நலன் கருதி அமைதி காத்தோம்” என தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *