தமிழகத்தின் சட்ட மன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள முன்னணி கட்சிகள் பலவும் ஈழத்தமிழர் தொடர்பாகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே “தனி ஈழம் தொடர்பாக தென்னிந்திய அரசியல் கட்சிகள் குறிப்பிடும் கருத்திற்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழக தேர்தல் பிரசார மேடைகளில் பேசப்படும் விடயங்கள் அனைத்தும் தேர்தலின் பின்னர் மறக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாரிய போராட்டத்திற்கு பின்னர் 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிரிவினைவாத செயற்பாடுகள் தோற்றம் பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.