இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந்து வரும் பந்த்துக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்துள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளது. பஸ்கள், ரயில்கள் மட்டும் ஓடுகின்றன. இந்த பந்த் சட்டவிரோதம் இல்லை, தடை செய்ய முடியாது என நேற்று மாலை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.
இன்று காலை பந்த் தொடங்கியது முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏஐடியூசியின் கீழ் வரும் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை. இருப்பினும், பஸ், ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. பலத்த பாதுகாப்பு அவற்றுக்குத் தரப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை- புளியரை இடையிலான ஒரு அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
திருப்பூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூட்பட்டுள்ளன.வேலூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரனின் அலுவலகம் கல் வீசித் தாக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர். வேலூரில் பெல் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையி்ல் உயர்நீதிமன்றம் முன்பு திறந்திருந்த சைக்கிள் கடையை சிலர் கல்வீசித் தாக்கி மூட வைத்தனர். திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பூந்தோட்டம், நன்னிலம், கொரடாச்சேரி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். நன்னிலம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பத்மாவதி தலைமையில் 100 பேர் பஸ்மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதேபோல் மன்னார்குடி கீழ்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டு பஸ் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு கணிசமான அளவில் ஆதரவு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடிய இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்..
இதற்கிடையே பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். அதில், பிப்ரவரி 4-ம் தேதியன்று இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும், அதை நடத்தக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். இந்த விவரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும், அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடியாதிருக்கும் நிலையில், நீங்கள் அறிவித்துள்ள 4-ந் தேதி முழு அடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதி முகாமில் கருப்புக் கொடி..
பாவூர் சத்திரம் இலங்கை அகதிகள் முகாமில் இன்று பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேனர் கட்டியுள்ளனர்.
Mr Cool
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
இதனால் பல்வேறு பகுதிகளிலும் இந்த இயக்கத்தைச் சேர்ந்த பாமக, மதிமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் 130 பேர், விழுப்புரத்தில் 204 பேர், கோவையில் 117 பேர், திருவண்ணாமலையில் 60 பேர் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.
விழுப்புரம் பஸ் நிலையம் அருகே மறியல் செய்ய முயன்ற முன்னாள் பாமக எம்எல்ஏ காசாம்பு பூமாலை தலைமையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
நந்தம்பாக்கத்தில் மதிமுக வட்டச் செயலாளர் கருணாநிதி, பாமக நகர் மன்றத் தலைவர் ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் நகர செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 15 பேர் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்,
திருவண்ணாமலையில் பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தை, சிபிஐ, பிஜேபி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 60 பேர் மறியல் செய்ய முயன்று கைதானார்கள்.
அருட்செல்வன்
இலங்கை பிரச்சனைக்காக நடத்தப்படும் பொது வேலை நிறுத்தம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தமிழ்நாட்டில் இன்று நடக்கும் பந்த் தேவையில்லை.
48 மணி நேரம் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்தது. அப்போதே விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் அறிவித்து அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களை விடுவித்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்காது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இரு தரப்பினரும் பேசி முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள் தாக்கப்படுவதாகவும், அரசுப் பேருந்துகள் எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்படி சம்பவம் நடந்திருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பராக்கிரமன்
இன்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ’சென்னையில் முழு அமைதி நிலவுவதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். ’சென்னையில் 100 சதவீதம் பஸ்கள் இயங்கின. தொழிற் சங்கத்தினர் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. கடைகள் திறந்திருந்தன. பள்ளிகள் இயங்கின. அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே நாங்கள் பேசியிருந்தோம். அதனால் நகரில் ஆர்ப்பாட்டம் கூட நடைபெறவில்லை.பஸ், ரயில்களுக்கு தகுந்த பாதுகாப்பு தரப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சப்ளையில் பாதிப்பு இல்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கின’ என்று தெரிவித்தார்.
nagan
தமிழ்நாட்டில் சிங்கள இனவாதிகளிடமிருந்து தமிழ்மக்களைக் காப்பாற்ற போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள்.
யாழ்ப்பாணத்தில் புலிகளிடமிருந்து தமிழ்மக்களைக் காப்பாற்ற போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள்.
என்னே விந்தையான உலகமடா
chandran.raja
இதில் விந்தையேதும் இல்லை.வன்னிமக்கள் பட்டதுன்பங்கள் யாழ்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையின் எந்தப்பகுதியிலும் இனிநடைபெறக்கூடாது என்பதற்காக யாழ்பாணத்து ஊர்வலம் நடத்திமுடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு ஊர்வலம் ஈழமக்களின் மேல்லிருந்த அனுதாபத்தை அங்குள்ள தலைமைகள் துருப்புசீட்டாக பாவித்து தேர்தல் வெற்றிக்காக நடத்தி முடிக்கப்பட்டது.