பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.
இந்த உத்தியோகபூர்வ பயணத்தின்போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்துகொள்கின்றார்.
பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சிறப்புரையாற்றுகின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தின்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுகளிலும் ஈடுபடவுள்ளார்.