“இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாத தமிழ் தலைமைகள் முஸ்லீம்களின் ஜனாசாவை அடக்கம் செய்யகோரி ஆர்ப்பாட்டம் செய்தமை வேடிக்கையானது” என சிங்களே அப்பி சங்கிவிதான அமைப்பின் தலைவர் யம்புர ரேவல சந்திரரத்ன தேரர் தெரிவித்தார்.
அப்பி சங்கிவிதான அமைப்பின் தலைவர் யம்புர ரேவல சந்திரரத்ன தேரர் தலைமையிலான தேரர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிழக்கு மாகாண இணைப்பாளர், கோல்டன் பொனாண்டே குழுவினர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் இனநல்லுறவு தொடர்பான 3 நாள் விஜயம் ஒன்றை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர்.
இதன்போது அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் இந்து மயானம் அபகரிப்பு தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட தோரர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரித்தார்.
குறித்த பிரதேசத்திலுள்ள சுமார் 1200 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் உறவினர்களை உயிரிழந்தவர்களை அந்த பகுதியிலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்து மயானத்தில் சடலங்களை புதைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு அந்த இந்து மயானத்தை முஸ்லீம் நபர் ஒருவர் தனது காணி என போலி காணிப் பத்திரத்துடன், உரிமைகோரி இந்து மயானத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பகுதியை மயானத்தின் நடுவே கம்பிவேலி அமைத்து அபகரிக்க முற்பட்டவேளை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தவேளை மயானத்தை உரிமைகோரிய முஸ்லீம் நபரை தாக்கியதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த அரச அதிகாரிகளை கடமைசெய்ய விடாது தடுத்ததாகவும் அந்த அப்பாவி பொதுமக்கள் 21 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் இரண்டு வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் பூர்விகமாக வாழ்ந்துவரும் இந்த தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை அடக்கம் செய்து வந்த இந்த மயானத்தை முஸ்லீம் நபர் அபகரித்துள்ளமை கண்டிக்கத்தக்கது அதேவேளை இந்த தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளின் உடல்களை புதைக்கமுடியாமல் கடந்த 3 வருடங்களாக இருந்துவருகின்ற நிலையில் தமது தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தமிழ் தலைமைகள் அதனை செய்யாது சர்வதேசத்திற்கு எமது நாட்டினை இக்கட்டுக்குள்ளகவே முன்வருகின்றனர்.
கிழக்கு மாகாணம் தான் கள்ள உறுதி வியாபாரம் செய்யும் பிரதானமான மர்ம இடமாகவுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் கள்ளமாக உறுதிமுடிப்பவர்கள் என நாங்கள் சில தினங்களில் மேற்கொண்ட கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.
முஸ்லீம் இன உத்தியோகத்தர்களுக்கு மிக தெளிவாக கூறுகின்றோம் பல பிரதேச செயலாளர்கள் அதற்கு கீழ்உள்ள உத்தியோகத்தர்களும் வேறு அரச திணைக்களங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும் இணைந்து குழுவாகத்தான் இந்த காணி வியாபாரத்தினை மேற்கொள்கின்றார்கள். இவ்வாறு தமிழ் மக்களுடைய இடங்களை பறித்தெடுக்கின்றார்கள். தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்ற எந்த அரசியல்வாதிகளும் இவர்களுக்காக முன்வருவதில்லை.
இவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தமிழ் அரசியல் வாதிகள் தீர்த்து வைக்காது கொரோனாவில் உயிரிழந்த முஸ்லீம் மக்கள் உடல்களை புதைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தனது இனம் தன்னுடைய மதம் தன்னுடைய மக்களுக்கான இறந்த உடல்களை புதைக்கும் இடத்தினை பாதுகாத்து அவர்களுக்கு வழங்க முடியாத மக்கள் பிரதிநிதிகளால் ஏதேனும் பயன்கள் இருக்கின்றதா என்ற கேள்வியை கேட்கின்றேன்.
எனவே அரசாங்கம் சட்டரீதியாக பரம்பரைபரம்பரையாக தங்களது உறவினரது சடலங்களை புதைத்துவந்த இந்த மயானத்தை பலவந்தமாக பறித்து கள்ள உறுதி முடிக்கும் இந்த வியாபாரத்தை மேற்கொள்ளும் இவர்களை கைது செய்யவேண்டும் என்பதுடன் ஜனாதிபதி, கிழக்குமாகாண ஆளுநர், அவர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் இந்த தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பாரதூரமான காணிப் பிரச்சனைக்கு தீர்வுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எனவே நாம் மீண்டும் இந்த பிரதேசத்திற்கு பயணிக்கும்வேளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்த காணிகளை எவ்வித பிரச்சனைகளுமின்றி இவர்களுக்கு வழங்குவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் இந்த இரவு வேளைகளில் கட்டப்பட்ட கம்பிவேலி மற்றும் கட்டடம் அனைத்தையும் அகற்றுவதற்கு மகா சங்கத்தினர் இருமுறை யோசிப்பதில்லை நாங்கள் முன்னின்று வேலிகளை அகற்றி கட்டிடங்களை அகற்றி இதனை மயானமாக மாற்றுவித்ததன் பின்னர். இதற்கு எதிராக செயற்பட்டுள்ளீர்கள் என சட்டப் புத்தகங்களையும் சட்டங்களையும் எடுத்துக் கொண்டு வரவேண்டாம். என்றார்.