“நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த வைத்தியசாலை தொடர்பில் உள்ள பிரச்சினைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று பாராளுமன்றில் கேட்ட வாய் மூலமான கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
நெடுந்தீவு பெரும் நிலப்பரப்புடன் தொடர்பை அற்றதும் 13 மைல் அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகும். இங்கு 6,000 மக்கள் வாழ்கின்றனர்.
இங்கு நோய்வாய்படும் மக்களை சிகிச்சைக்காக எடுத்து செல்வதற்கு அம்புலன்ஸ், படகு சேவைகள் கூட இல்லை. இங்கிருந்த நிரந்தர வைத்தியர் ஓய்வு பெற்று சென்றுள்ளார். இரண்டு வைத்தியர்கள் தற்காலிக அடிப்படையில் இங்கு வந்து செல்கின்றனர்.
கடந்த 8 வருட காலமாக வைத்தியசாலை தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். யாழ் வைத்தியசாலையில் 300 வைத்தியர்கள் உள்ளனர். யாழ் மாவட்டத்திலும் வைத்தியர்கள் உள்ளனர்.
இவர்களில் யாராவது சிலரை இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியராக நியமித்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும். பின்தங்கிய பிரதேசமான இங்கு கடமையாற்றுவதற்கு சிறப்பு கொடுப்பனவையாவது வைத்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.