“தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ பௌத்ததிற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அவலுகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டிற்கோ, நாட்டின் ஒற்றுமைக்கோ பௌத்த மக்களுக்கோ எதிரானது அல்ல. இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.தமிழ்தேசிய கூட்டமைப்பானது பிரிவுபடாத இந்த நாட்டிற்குள் தமிழ் மக்கள் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணயத்துடனும் வாழ்வதற்கு ஆசைப்படுகின்றார்கள்.
தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழக்கூடாது, சமத்துவத்துடன் வாழவேண்டும் என்று யோசிக்கின்றார்களே தவிர இந்த நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ பௌத்ததிற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பானது அரசியல் ரீதியான ஒரு தீர்வினையே வேண்டி நிற்கின்றது.மாறி மாறி வந்து அரசுகள்தான் இந்த நாட்டினை சீரழிவுக்குள் கொண்டு சென்றுள்ளது.யானை தனது தலையில் மண்ணை அள்ளிக்கொட்டுவதுபோன்று அரசாங்கங்கள் மாறிமாறி விடும் பிழைகளினால் சர்வதேசத்திற்கு முன்பாக இன்று அவமானச் சின்னமாக அவமானப்பட்டு நிற்கின்றது.
இந்த நிலைமாற வேண்டும். இந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போ,தமிழ் மக்களோ காரணம் இல்லை.இதற்கு முற்று முழுதான காரணம் இந்த அரசாங்கமும் அதனை பிரதி நிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியும் அமைச்சர்களுமாகும்.பந்து இன்று அரசாங்கத்தின் பக்கத்தில் நிற்கின்றது. அந்த பந்தினை தடுத்து ஆட முற்பட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்கும் நிலையேற்படும். அந்த பந்தினை நன்றாக அடித்து விளையாடினால் இந்த நாடு சுபீட்சமான,வளமிக்க நாடாக எதிர்காலத்தில் மிளிரும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.