“எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய அனுமதிக்கப் போவதில்லை” என தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஆணைக்குழு, தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில், அரசியல் குழுக்கள் தேசியக் கட்சிகளாகப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் கூட்டத்தின் போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போதுள்ள பெயர்களைத் திருத்துவதற்கு இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு நியாயமான நேரத்தை வழங்கவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மாற்றுவதற்கும், 18 வயதை எட்டியவர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்குள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்பதை உறுதிசெய்வதற்கும் வர்த்தமானி செய்யப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, 1985ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கில் மோதல் காரணமாக உயிரிழந்தவர்களை உறுதிப்படுத்துவது தேர்தல் ஆணையகத்தின் மற்றொரு தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறந்தவரின் விபரங்கள் வர்த்தமானி செய்யப்பட்டு ஏப்ரல் 23ஆம் திகதி வரை மாவட்ட செயலக அலுவலகங்களிலும் தேர்தல் ஆணையகத்தின் வலைத்தளத்திலும் காண்பிக்கப்படும்.
இதன்படி, பட்டியலில் தவறாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆணையகத்தில் பதிவுசெய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மேலும் பெயர்கள் 2020 தேர்தல் பதிவேட்டில் சேர்க்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.