எதிர்வரும் திங்கட்கிழமை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனினால் நேற்று நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்த விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விவாத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேவராசா கலையரசன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, பதிலளித்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தொல்பொருள் விடயப்பரப்பானது, எந்தவொரு சமயத்திற்கோ அல்லது மதத்திற்கோ அல்லது ஏதாவது ஒரு குழுவிற்கு வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளாமல், ஏன் வடக்கில் மாத்திரம் அகழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றீர்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உலகில் இந்த நாட்டைப் போல, தொல்பொருள் சிறப்புமிக்க வேறு ஒரு நாடு எங்கும் இல்லை. இது எம் அனைவரினுடைய உரிமையாகும். எனவே, இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதில் அனைவரும் பஙற்கேற்று தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்தால், எவ்வாறான முடிவை எடுக்கலாம் என்பதை ஆராயலாம் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.