“வடக்கில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் சபையில் நேற்று வலியுறுத்தினர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
குறிப்பாக கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இது தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் தொல்லியல் துறையினரை விடவும் இராணுவத்தினரே அதிக அக்கறை கொண்டுள்ளனர்- என்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான த.கலையரசன் இவ்விடயம் தொடர்பில் உரையாற்றுகையில், தொல்லியல் திணைக்களத்தின் பணியில் ஏன் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்? நாம் சமாதானத்தை விரும்புகின்றோம். அதேபோன்றே எமது ஆலயங்களும் சமாதானத்தையே வலியுறுத்துகின்றன” – என்றார்.
இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனும் இவ்விவாதத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் உரையாற்றுகையில்,
3500 ஆண்டுகள் பழைமையான உருத்திரபுரம் சிவன் கோயிலில் அகழ்வு ஆராய்ச்சி செய்து சிங்களவர் பகுதியாக்க முற்படுகின்றனர். இது வடபகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கிலுள்ள இது தொடர்பான அதிகாரிகளுடன் எந்தவித கலந்துரையாடல்களையும் செய்யாது பிக்குகள் மற்றும் இராணுவத்தினரின் தலையீடுகளுடன் தமிழர்களின் வரலாறுகளை திரிவுபடுத்தும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகினறன.
இதன் கருவியாக தொல்லியல் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது” – என்றார்.