“உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.” என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் அமர்வுகளில் என்ன நடக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கை விவகாரம் தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்யப்படும். 2022 செப்டெம்பர் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் திரட்டப்படும் ஆவணங்கள் எல்லாம் 2022 செப்டெம்பருக்குப் பின்னர் உலக நாடுகளிலுள்ள நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும். அவ்வாறு நடைபெற்றால் குறைந்த பட்சம் தீர்மானத்தை ஆதரித்த 22 நாடுகளிலாவது வழக்குத் தொடுக்கப்படும்.
இவ்வாறு வழக்குத் தொடுத்தாலும் எதுவும் செய்யமுடியாது என இலங்கை அரசு சவால் விடுக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, முதலீடு, சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் இறுக்கமான போக்கு கடைபிடிக்கப்படும்.
எனினும், இலங்கைக்கு இன்னுமொரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. 2022 செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் சேர். டெஸ்மன் டி சில்வாவாலும் (பரணகம ஆணைக்குழு), அதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய நம்பகமான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.
தங்களுக்கு விசுவாசமான நீதிபதிகளை நியமிக்காமல், உலகம் ஏற்றுக்கொள்கின்றவர்களை அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை நீதிபதிகளை உள்ளடக்கிய வகையில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவி, விசாரணைகளை முன்னெடுத்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் அழைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்பட ஆரம்பித்துவிடும். இலங்கை விவகாரம் ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் பொறிமுறை செயற்படவில்லை. இனி செயற்படத் தொடங்கினால் அதனை நிறுத்த முடியாது – என்றார்.