ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடுகடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மார்ச் 30 ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களான பெருமளவு இலங்கை தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம்.
ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை அச்சங்களிற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜேர்மனி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ஒருவாரகாலத்திற்குள் அந்த அரசாங்கத்திடமிருந்தே புகலிடம் கோரும் புகலிடக்கோரிக்கையாளர்களை அந்த அரசாங்கத்தின் கரங்களில் ஒப்படைப்பதற்கு ஜேர்மனி முயல்வது முற்றிலும் எதிர்மாறான செய்தியை தெரிவிப்பதாக அமையும்.
இதன் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்களின் உயிர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த தவறான முடிவை உடனடியாக மீள் பரிசீலனை செய்யுமாறு ஜேர்மன் அரசாங்கத்தை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.