கொழும்பு, பன்னிபிட்டிய பகுதியில் லொறி சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹரகம காவல் நிலையத்தில் சேவையாற்றும் காவல் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த காவல் அதிகாரி நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதிப் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேற்கண்ட காவல்துறை உத்தியோகத்தர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்யை தினம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை எழுப்பியிருந்தது.
இந் நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் காவல்துறை மா அதிபருக்கு விசேட ஆலோசனை வழங்கியிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே குறித்த காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குள்ளான லொறியின் சாரதி தற்சமயம் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.