“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சித்தாந்தத்தை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களும் தடை செய்யப்படும்” என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர், புலம்பெயர் மக்களின் அமைப்புகளை தடை செய்தமை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் உதய கம்மன்பில, இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கை ஒரு நாடு என்ற வகையில், வெளிநாட்டினருடன் நெருக்கமாக செயற்படும். ஆனால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு குழு அல்லது தனிநபரையும் தடை செய்யும். புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்பின் கீழ் பிரிவினைவாதம் தடைசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ புலிகளின் சித்தாந்தத்தை முன்வைக்கும் இதுபோன்ற குழுக்கள் அல்லது தனிநபர்களுடன் தொடர்புகளைப் பேண இலங்கை தயாராக இல்லை. அவர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இவர்களை தடை செய்யவில்லை. அவர்கள் புலிகளின் சித்தாந்தத்தை முன்வைப்பார்கள் எனின், அவர்கள் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவார்கள் எனின் அவர்கள் தடை செய்யப்படுவார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பலரின் பெயர்களையும் கறுப்புப் பட்டியலில் இணைத்து இலங்கை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இலங்கை அரசாங்கம் குறித்த கறுப்புப் பட்டியல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதற்கமைய, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு – அவுஸ்திரேலியா மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.