இலங்கை பிரச்சனை-நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – விஜயகாந்த் : புறக்கணிக்க மாட்டோம் – தா.பாண்டியன்

vijayakanth.jpgஇலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை மத்திய அரசு தடுக்க தவறினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினை எதிர்பாராத வகையில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. சிங்கள அரசின் முப்படைகளும், தமிழர் பகுதிகளை தாக்கியதன் விளைவாக இன்று முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் 2   1/2 லட்சம் தமிழர்கள் போரில் சிக்கியுள்ளனர். எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது. இந்திய அரசு தமிழினப்படுகொலை தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோ டி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சிங்களராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

புறக்கணிக்க மாட்டோம்:

இதுபற்றி கருத்து கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இலங்கைப் பிரச்சனைக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனையை முன் வைக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர உள்ளன. தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டணி கட்சிகள் அனைத்தும் விரைவில் கூடி ஆலோசனை நடத்துவோம். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பகீ
    பகீ

    இந்தியா செய்யும் ஆயுத உதவி ஒரு ”பிஸ்னஸ் டீல்” என சொன்னவரெல்லோ இவர்!

    Reply
  • santhanam
    santhanam

    இந்த அரசில் சதுரங்கத்தில் விஐகாந்வெளியிலிருந்து பார்க்கிறார் அதுதான் உண்மை ஏன் என்றால் அவரின் ஆலோசகர் எம்-யி.ஆர்ரின் ஆலோசகர் தான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விஜயகாந்த் வரும் லோக்சபா தேர்தலிலும் மண்ணைக் கவ்வ வேண்டி வருமோ என்ற பயத்தில் இப்படியொரு பீலா விடுகின்றார். விஜயகாந்த்தைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் பிரைச்சினையில் அரசியலுக்கு முன் அரசியலுக்குப் பின் என்று வகைப்படுத்தலாம். இவருக்குத் தில் இருந்தால் மற்றைய அரசியல் கட்சிகளின் பதிலை எதிர்பாராமல் தனது கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டாது என்று அறிவிக்கலாமே?? எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!!

    Reply
  • Baabeeq
    Baabeeq

    Hello Vijekanth, This is not a film shooting, real fighting, come on man and fight

    Reply
  • jeyasuthan
    jeyasuthan

    காங்கிரசுடன் 200கோடி பேரம் பேசி தமிழகத்தில் கூட்டுக்க்கு டீல் பேசினபடி இருக்கு. இவர் காதுல பூவைக்க பார்க்கிறார். பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த தன்ர கலியாணமண்டபத்தை இடிக்க எவ்வளவு பாடுபட்டவர். படங்களில் புரட்சி நியத்தில் கள்ளர்மகன்.

    Reply