“இலங்கையில் மீண்டும் பழிவாங்கல் ஆட்சியே இடம்பெறுகின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றும்போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜேர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றது.
இலங்கையில் பல தனிநபர்களும், அமைப்புக்களும் தடை செய்யப்படுகின்ற நிலையில், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனி அங்கிருக்கின்ற தமிழர்களை திருப்பியனுப்ப முனைவது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும்.
ஜேர்மனியில் இருக்கின்ற தமிழர்கள் இப்போதைக்கு இலங்கையில் வந்து வாழ முடியாத சூழ்நிலை இருப்பதை ஜேர்மனியும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கருத்தில்கொள்ள வேண்டும். ஏனெனில், இலங்கையில் மீண்டும் பழிவாங்கல் ஆட்சியே இடம்பெறுகின்றது.
ஜேர்மனி, இந்த நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களைத் திருப்பியனுப்பும் தீர்மானத்தை ஜேர்மனி கைவிட வேண்டும்.” என்றார்.