“ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி  சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.”  – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி  சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் இன்றைய தினம் வேப்பவெட்டுவான் பிரதேசத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு களவிஜயத்தினை மேற்கொள்வதற்காக நாங்கள் வந்திருந்தோம்.

நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்து பார்த்ததற்கும் இன்றைய தினம் வந்து பார்த்ததற்கும் சில வேலைத்திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  சட்டவிரோதமாக மண் எடுத்ததாகச் சந்தேகப்படும் இடங்களை திரும்பவும் மூடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான மண் எங்கே இருந்து வந்தது என்று கேட்டால் அந்தக் கேள்விகளைக் கேட்டதற்காக தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு எங்களையே ஒரு அச்சுறத்தலுக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன.

இன்று இன்னுமொரு பிரதேசத்தையும் நாங்கள் வந்து பார்த்தோம். இது அணைக்கட்டுக்கு அருகாமையில் இருக்கும் பிரதேசம். இதில் மண் அகழ்வு மேற்கொண்டமையால் 2500 ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்சலைக் கூடச் செய்ய முடியாத நிலைமை இன்று இருக்கின்றது.

எமது மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறுவதாக இருந்தது. அது ஒத்திவைக்கப்படுவதாக இன்று கடிதம் கிடைத்தது. இவ்வாறாக மாவட்டத்தில் முக்கிய விடயங்களைத் தீர்மானிக்க முடியாத மாவட்ட அபிவருத்திக் குழுத் தலைவரும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும் அவசியம் இல்லாத ஒரு விடயமாகவே தென்படுகின்றது.

நாளைய தினமும் மூன்று  அமைச்சர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்து கூட்டம் வைக்கப் போகின்றார்கள் என்று அறிகின்றேன். இந்த மாவட்டத்தில் மேலதிகமாக ஏதேனும் வளங்களைச் சூரையாடலாம் என்று பார்ப்பதற்காகத்தான் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றதா என்றும் என்று நினைக்கத் தோணுகின்றது.

இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது எவருடைய அனுமதிப்பத்திரமாக இருந்தாலும் சரி. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது இந்தப் பிரதேச மக்களின் வளம். இந்த வளங்களை அழித்தால் இந்தப் பிரதேசத்தில் இனி வாழும் மக்களுக்கு எந்தவித எதிர்காலமும் இல்லாமல், குடிநீரும் இல்லாமல், எவ்வித வளமும் இல்லாமல் போகும். இப்பிரதேசம் ஒரு பாலைவனமாகப் போவதற்கும் சாத்தியங்கள் இருக்கும். எனவே இதனை உடனே நிறுத்த வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *