சுற்றுலாத் துறையும் ஏனைய ஏற்றுமதித்துறைகளும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதுடன் எமக்கு வருகின்ற அந்நியச் செலாவணியும் சகல வழிகளிலும் முடங்கிக் கிடக்கின்றன எனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க, நாடு பொருளாதார சிக்கலில் மூழ்கித்தத்தளிக்கின்றது எனவும் கூறினார். இராகலை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்; இந்த அரசிடம் முறையான அபிவிருத்தித்திட்டம் இன்மையாலும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கையாலும் நாடு பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கடன் வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. நாட்டை மீட்டெடுக்க முதற்கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அணிதிரண்டு வாக்களியுங்கள்.
மத்திய மாகாணசபையை கலைக்கும் வரை நான் போட்டியிடுவது அரசுக்கும் ஜனாதிபதிக்கும் தெரியாது. அறிந்திருந்தால் மாகாணசபையை கலைத்திருக்கமாட்டார்கள். நான் போட்டியிடுவதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்தனர். முடியாது போனதால் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பல சட்டவல்லுநர்களை அனுப்பி வைத்து என்னை அகற்ற முயற்சி செய்தனர் . ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது கண்டியில் முகாமிட்டு அரச பயணத்தில் அனைவருக்கும் உணவும் , பெண்களுக்கு சாறியும் , ஆண்களுக்கு சாரமும் , பாடசாலை உபகரணங்களும் வழங்கி வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர். இவை அனைத்தும் எனதும் ஐ.தே.க.வினதும் வெற்றியின் உறுதியைக் கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு உள்ளது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் உண்டு. அரசியல் சாசனத்திலேயே உள்ளது. இங்குதான் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. அரசுக்கு எதிரானவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஊடகத்தை சேர்ந்தவர்களும் கொலை செய்யப்படுகின்றனர். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகின்றோம். அனைவரையும் அரவணைத்தே தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
ஜனாதிபதியோடு தொண்டமானும் சந்திரசேகரனும் இணைந்துள்ளனர். இங்கு அவர்களுக்கு மரியாதை கிடையாது. அடிமட்டத்தில் தான் இவ்விருவரையும் நடத்துகின்றார். இரண்டரை வருடமாக மலையக மக்கள் படும் அவலத்திற்கு இவ்விருவரும் என்ன செய்தனர்? நான் இவ்விருவரையும் இத்தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு அழைத்தேன். அதற்கு அவர்கள் இத்தேர்தலில் வரமுடியாது. பொதுத் தேர்தலுக்கு வருகின்றோம் என்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய சௌமியமூர்த்தி தொண்டமான் ஒருவரால் தான் முடியும். ஆறுமுகனால் முடியாது.
இம்முறை திறமையான தமிழ் வேட்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் வெற்றிபெற்று நல்ல சேவை செய்வார்கள். கண்டியில் 13 ஆசனமும் ஐ.தே.க. வசமாவது உறுதி. அதே போன்று நுவரெலியாவிலும் மாத்தளையிலும் எமது வேட்பாளர்கள் வெற்றிபெற்று மத்திய மாகாணசபையைக் கைப்பற்றுவோம். இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பேன். உலக நாடுகளிடமிருந்தும் உதவிகளை இம்மாகாணசபைக்குப் பெற முடியும். பெற்றுப் புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு, மின்சாரவசதி, பாடசாலை அபிவிருத்தி ,பாதை அபிவிருத்திகளை மேற்கொள்வோம்.
இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வேட்பாளர்களான ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சதாசிவம் , ஜகத் சமரஹேவா, ரவீந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.