“நான் மாகாண சபை தேர்தல் முறைக்கு எதிரானவனே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல.” – யாழில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர !

“நான் மாகாண சபை தேர்தல் முறைக்கு எதிரானவனே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வடக்கில் இரண்டு காவல் நிலையத்தை திறப்பதற்காக நான் வந்துள்ளேன் மல்லாவி மற்றும் மருதங்கேணி பகுதியில் பொது மக்களின் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இரண்டு காவல் நிலையங்களை திறந்து இருக்கின்றேன்.

தற்பொழுது நாடு பூராகவும் 494 காவல் நிலையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 காவல் நிலையங்களை புதிதாக அமைக்க உள்ளோம்.

அந்த வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வடபகுதியில் இரண்டு புதிய காவல் நிலையங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன அத்தோடு பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது காவல்துறை சேவையினை பெற்றுக் கொள்வதை நிறுத்த இதனை செய்துள்ளோம்.

தற்பொழுது நான் பொதுமக்களிடம் உரையாடும் போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளை கூறும் போது இந்த பிரச்சனை எனக்கு கூறினார்கள் அதற்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே வேலையில்லாப் பிரச்சினை தான் இந்த மணல் கடத்தலுக்கு காரணமாக இருக்கின்றது எனவே கல்வி கற்று வேலையற்றுள்ளோர் மற்றும் இதன் காரணமாக கல்வியை இடையே நிறுத்தி வேலையில்லாது உள்ளோருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முடியும் .

இங்கே உள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்குமிடத்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் எனவே அமைச்சர் டக்லஸ் உடன் இணைந்து இந்த பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக நான் யோசித்துள்ளேன்.

அத்தோடு அவ்வாறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதன் மூலம் அந்த இளைஞர் யுவதிகள் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடமாட்டார்கள் எனினும் அவ்வாறு சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.

அத்தோடு புங்குடுதீவு பகுதியில் வெகு விரைவில் புதிதாக காவல் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்ட உள்ளது இன்று ஆரம்பித்து இருக்கின்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைக்கப்படும்.

மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன் அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்க்கிறேன் நாளையும் அதே கருத்தை தான் கொண்டுள்ளேன் அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று.

மாகாண சபைமுறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும் ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த 9 மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும் மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும் ஆனால் மத்திய அரசாங்கம் என்பது ஒன்று தான். ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமானால் அந்த தீர்மானத்தினை நான் எதிர்க்கப் போவதில்லை இந்த பிரதேசத்தில் மாகாணசபை இல்லாது போய் கடந்து மூன்று வருடம் ஆகிவிட்டது தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. கடந்தமுறை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினை பயன்படுத்தாது திறை சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.

ஆகவே மாகாண சபை என்பது மக்களுக்கு பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.

எனினும் வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள் அது ஒரு அரசியல் காரணமாக இருக்கலாம் ஆனால் சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவன்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம் ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபைக்கு எதிரானவன் என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *