“வன்னி பெருநிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ச் சூழலிலும், போர் ஓய்ந்த பின்னரும் அயராது பாடுபட்டவர் மறைந்த மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்.” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கில் கிறிஸ்தவ மக்களுக்காக மட்டுமல்லாது இந்து, முஸ்லிம், பௌத்த மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்க்கை தொடர்பாக ஆயருக்கு அக்கறை இருந்தது என ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
மேலும், தான் அமைச்சராகப் பதவி வகித்த காலம் உட்பட பல சந்தர்ப்பங்களில் ஆயர் இராயப்பு ஜோசப்புடன் பேசும் வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ள ஹக்கீம், மக்களுக்காக ஆயர் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மொழிக்கு அப்பால் ஆயரின் ஆங்கில மொழிப் புலமைகண்டு வியந்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதேவேளை, காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்களைத் தாமும் அனுபவிப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஓய்வு நிலை ஆயரின் மறைவிற்கு தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.